ஒரு மரத்தில் காக்கா ஒன்று கூடு கட்டி இரண்டு முட்டைகளை இட்டிருந்தது. அவை பொரிந்து குஞ்சுகளாகி அவற்றை கொஞ்சி குலாவி, பேணி வளர்க்கலாம் என ஆசையோடு அந்த காக்கா இருந்தது.
அப்போது திடீரென்று பலத்த காற்று வீசியது. அதில் அந்த மரம் வேரோடு சாய்ந்து விட்டது. அதிலிருந்த காக்காயின் கூடு பிய்ந்து விழ, அதிலிருந்த முட்டைகளும் உடைந்து விட்டன. காக்காவுக்கு காற்றின்மீது கோபமான கோபம். ‘உன்னை என்ன செய்யப் போகிறேன் பார். என் அலகால் உன்னை குத்திக் கிழிக்கப் போகிறேன்‘ என்று மனதிற்குள்ளேயே கறுவிக்கொண்டு அதை எப்படி பழி வாங்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தது.
எதற்கும் தன் அலகை தீட்டிக் கொள்ளலாம் என்று அருகிலிருந்த மாமரத்தில் தன் அலகைத் தீட்ட ஆரம்பித்தது.
‘ஏ காக்கையே! ஏன் என் மரத்தில் உன் அலகை தீட்டுகிறய்? எனக்கு எப்படி வலிக்கிறது தெரியுமா?‘ என்று மாமரம் காக்காவிடம் கேட்டது.
‘ஆத்திரத்தில் நிதானம் இழந்து விட்டேன். என்னை மன்னித்துவிடு மாமரமே!‘ என்றது காக்கா.
‘அப்படியென்ன ஆத்திரம்? யார்மீது ஆத்திரம்?‘ என்று கேட்டது மாமரம்.
‘காற்றின்மீதுதான். அது என் கூட்டைக் கலைத்து விட்டது. அதனால் எனது இரு வாரிசுகளும் பிறக்கும் முன்பே அழிந்து போயின.‘ என்றது காக்கா.
‘காற்றை குறை கூறி என்ன பயன் காக்காவே! நீதான் உன் கூட்டை பாதுகாப்பான இடத்தில் கட்டியிருக்க வேண்டும்.‘
‘மரக்கிளையின் உச்சிதான் பாதுகாப்பான இடம். இங்குதான் மனிதர்கள் வர மாட்டார்கள். பாம்பு வராது. இதைவிட பாதுகாப்பு வேறு எங்கே கிடைக்கும்?‘
‘நீ உன் கூட்டைப் பற்றி சொல்கிறாய்! என்னைப் பார். இன்று நான் பெரிய மரமாக வளர்ந்து எல்லவற்றையும் சமாளித்து நிற்கிறேன். ஆனால் என் இளமைக் காலத்தில் நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். நான் செடியாக இருக்கும்போது என்னை வேரோடு பிடுங்கி எறிந்து விடுகிறேன் என்று ஆக்ரோஷமாக காற்று வீசும். நானோ தலை குனிந்து வளைந்து பணிந்து என்னை பாதுகாத்துக் கொள்ள கற்றுக்கொண்டேன். அப்புறம் ஆடு, மாடுகள் வந்து மேய்ந்து விடும். மீண்டும் துளிர்விட்டு வளர்வேன். சிறுவர்கள் வந்து பிய்த்தும் ஒடித்தும் விடுவார்கள். சற்று வளர்ந்த பிறகு வீட்டு விசேஷங்களுக்கென்று என்னை ஒடித்து செல்வார்கள். காய்த்த பிறகு கல்லால் அடித்து என்னை காயப்படுத்துவார்கள். அதோடு மட்டுமில்லாமல் இப்போது வீடு கட்டப் போகிறேன், ரோடு போடுகிறேன் என்று என்னை வெட்டிப்போட்டு விடுகின்றனர். உனக்குத்தான் எந்த தொந்தரவும் இல்லை. உங்களுக்கு எப்போதும் ராஜ உபசாரம்தான். சாப்பாட்டை வைத்து அழைத்து முதல் மரியாதை செலுத்துகிறார்கள்.‘ என்று மாமரம் தன்னுடைய சோகக் கதையை கூறியது.
காக்காவும் ஏதோ தான் மட்டும்தான் கஷ்டம் அனுபவிப்பதாக நினைத்து வருந்தியது. மாமரத்தின் கதையைக் கேட்டதும்தான் தன்பாடு எவ்வளவோ மேல் என்று தோன்றியது.
அடுத்த தடவை வேறு பாதுகாப்பான இடத்தில் முட்டை இட்டுக்கொள்ளலாம். அதை விட்டு காற்றுடன் சண்டை போடப்போகிறேன் என்று கிளம்பியது எவ்வளவு முட்டாள்தனமானது என்று காக்கா உணர்ந்து கொண்டது.
நீதி:
‘மற்றவர்களை குற்றம் சொல்லாமல் நம் தவறை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்‘
No comments:
Post a Comment