Tuesday, 19 February 2013

நவ்வாப்பழம் (நாவல் பழம்)

படுத்த படுக்கையில் கிடக்கும் வயதான தந்தையைச் சுற்றிலும் அவரது வாரிசுகள் ஐந்து பேரும் நின்று கொண்டிருந்தனர்.

’இன்று இரவுக்குள் நான் இறந்து விடுவேன்’ என்று தந்தை கூறினார். சுற்றி நின்ற அவரது வாரிசுகளின் கண்களில் கண்ணீர் பொலபொலவென்று வழிந்தது.

அப்போது அவர்களில் மூத்தவன், மற்றவர்களிடம், ’தந்தையை கவனித்துக்கொள்ளுங்கள். நான் கடை வரைக்கும் போயிட்டு உடனே வர்ரேன்’ என்று கூறி விட்டு வெளியே சென்றான்.

’அப்பா இப்படி படுக்கையில் இருக்கும்போது அப்படியென்ன வெளியே உனக்கு வேலை?’ என்று அவனை கோபத்துடன் கேட்டனர்.

’அப்பவுக்கு நவ்வாப்பழம் ரொம்ப பிடிக்கும். கடைசி நேரத்தில் அதையாவது வாங்கித் தரலாமே! அதை வாங்கி வரத்தான் கடை வரைக்கும் போயிட்டு வர்ரேன்.’ என்றான்.

’அப்ப சரி. போய்ட்டு வா.’ என்றவுடன் மூத்தவன் வெளியே சென்றான்.
சிறிது நேரத்தில் நாவல் பழ பொட்டலத்துடன் திரும்பியவன், அதைத் தன் தந்தையிடம் கொடுத்தான்.

அவரும் அதை மிகவும் ரசித்து ருசித்து சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்து விட்டு வாரிசுகளை திருப்தியோடு பர்த்தார்.

மூத்தவன் அவரைப் பார்த்து, ’அப்பா! இந்த இறுதி நேரத்தில், நாங்கள் காலாகாலத்திற்கும் பின்பற்றக்கூடிய இறுதிக் கருத்தை நீங்கள் எங்களுக்கு கூற வேண்டும்’ என்று கேட்க, அவரும் உடனே, ’நீ வாங்கி கொடுத்த நவ்வாப்பழங்கள் ரொம்ப நல்லா இருந்துச்சு’ என்று கூறினார்.

அடுத்த வினாடியே அவர் உயிரும் பிரிந்து விட்டது.

த்ந்தை ஒன்றும் சொல்லாமல் போய் விட்டாரே என்று எல்லோரும் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, த்ந்தை கூறியதன் கருத்தை உணர்ந்த மூத்தவன் மட்டும், ’அப்பா நமக்கு ஒரு கருத்தைக் கூறிவிட்டுத்தான் சென்றிருக்கிறார். அதாவது, நாம் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் மகிழ்ச்சிக்குரியது. நாம்  கடந்து செல்லும் ஒவ்வொரு மணித்துளியும், இனி வரப்போகும் ஒவ்வொரு மணித்துளியும் நமக்கு உரியதல்ல. இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நேரம் மட்டுமே நமக்கு சொந்தமானது. இதுவே நிஜம். ஆகவே இந்த நிமிஷத்தை சந்தோஷமாக வாழ வேண்டும்’ என்று மற்றவர்களுக்கு த்ந்தை கூறியதன் கருத்தை விளக்கிக் கூறினான்.

மற்றவர்களும் கண்ணீருடன் த்லையை ஆட்டியபடி தங்கள் தந்தைக்குப் பிரியா விடை கொடுத்து அனுப்பினார்கள்.

நீதி:
‘கடந்த காலத்தையோ எதிர் காலத்தையோ நினைத்து கலங்காமல் நிகழ்காலத்தில் சந்தோஷமாக வாழ வேண்டும்.‘

No comments:

Post a Comment